Tuesday, September 7, 2010

திலகர் திடலில் பெயர்ப் பலகை வைக்க உத்தரவு - தினமணிச் செய்தி

சென்னை, அக். 6, 2009: சென்னை மெரினாவில் உள்ள திலகர் திடலில் பெயர்ப் பலகை வைக்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி தெரிவித்தார்.  மகாத்மா காந்தி, சுப்பிரமணிய சிவா, கக்கன் ஆகியோரின் பிறந்த நாள் விழா, மெரினாவில் உள்ள ""திலகர் திடலில்'' ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. காமராஜர் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.  

""திலகர் கட்டம் என்ற இந்த இடத்துக்கு அரசியல் அங்கீகாரம் அளித்து பெயர்ப் பலகை நிறுவ உத்தரவிட வேண்டும், இல்லையென்றால், நீதிமன்றமே பெயர்ப் பலகை அமைக்க உத்தரவிடும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது'' என்றார் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி.  

""மக்களிடையே தேசபக்தி வலுப்பெற தேசியச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த நிலையில், திலகர் கட்டம் என்ற இடத்திற்கு அடையாளமாக உள்ள கல்வெட்டை நிறுவுவதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்'' என்றார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி. சேகர்.  

""பாலகங்காதர திலகர், நேதாஜி, காமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் இந்தத் திடலில் பேசியுள்ளனர். மகாத்மாகாந்தி ஒத்துழையாமை இயக்கத்துக்கு இதே திலகர் கட்டத்தில் தான் அறைகூவல் விடுத்தார். இதை வருங்கால சந்ததியினர் நினைவில் கொண்டு தேச பக்தியை வளர்த்துக் கொள்ள திலகர் திடல் பெயர்ப் பலகை நிறுவப்பட வேண்டும்'' என்றார் காந்தி தரிசன கேந்திரத் தலைவரும், பாரத மணியின் ஆசிரியருமான பி.என். சீனிவாசன்.  

குமரி அனந்தன் வேண்டுகோள்:   முன்னதாக, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், ""சுப்பிரமணிய சிவாவின் கனவான பாரத மாதா ஆலயத்தை பாப்பாரப்பட்டியில் நிறுவ அனைவரும் உதவி புரிய வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

நன்றி- தினமணி

No comments:

Post a Comment