மெரினா கடற்கரையில் மாநில கல்லூரி எதிரே, கண்ணகி சிலை அருகே உள்ள வெட்டவெளியான பகுதி நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்திய புண்ணிய தலமாகும்.
இந்த இடத்தில் மகாத்மா காந்தி 7 முறை பொதுக்கூட்டங்களில் பேருரையாற்றியது வரலாற்று நிகழ்வு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் "ஒத்துழையாமை இயக்கம்' குறித்து காந்தி இந்த இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.
இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"சுதந்திரம் நமது பிறப்புரிமை' என்ற முழக்கத்தை நமக்குத் தந்த மாபெரும் தலைவர் லோக மான்ய பாலகங்காதர திலகர். ஆங்கிலேயரை எதிர்த்து சிம்மகர்ஜனை செய்த வீரபூமி இது.
இதன்பின் 1908}ம் ஆண்டில், திலகரின் நினைவாக சுப்பிரமணிய சிவா மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர் இந்த இடத்துக்கு "திலகர் கட்டம்' என்று பெயர் சூட்டினர்.
திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது பல்வேறு இலக்கிய படைப்புகள் உருவாகக் காரணமான "பாசறையாக' இந்த இடம் திகழ்ந்தது.
பாரதத் தாயின் வீரப் புதல்வர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், லாலா லஜபதி ராய், சி.ஆர். தாஸ், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், விபின் சந்திரபால், நேரு, ராஜாஜி, ஜி. சுப்பிரமணிய அய்யர், எஸ். சீனுவாச அய்யங்கார், எஸ்.சத்தியமூர்த்தி, காமராஜர், ம.பொ.சி. உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்கள் இந்த இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளனர். துர்காபாய் தேஷ்முக் தலைமையில் இந்த இடத்தில் ஏராளமான பெண்கள் திரண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது மற்றொரு முக்கிய சிறப்பு ஆகும்.
இந்த இடத்தை சுதந்திரப் போராட்ட நினைவாக "திலகர் கட்டம்' என்று வருங்காலத் தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில் விடுதலை சின்னமாக கல்வெட்டு நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால், பாரத மணி இதழின் ஆசிரியரும், காந்தி தரிசன கேந்திரத்தின் தலைவருமான பி.என். சீனிவாசன் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் வழக்கறிஞர் ஆர். காந்தி ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கில், "திலகர் கட்டம்' நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது மெரினா கடற்கரையில் "திலகர் திடல்' கல்வெட்டு "சப்தமின்றி'நிறுவப்பட்டுள்ளது.
நன்றி - http://chennailive.net/chennainews/index.php?id=1160
| Published on 26-Jan-2010 |
No comments:
Post a Comment